“அரசியலில் வெற்றிடம் இருக்கிறது''
‘' உங்களை மக்களுக்குத் தெரியாதா? நீங்க போனாப் போதும். சுலபமா ஜெயிச்சிடலாம்''
-இன்றைக்குச் சில இடங்களில் கேட்கிற குரல்கள் அன்றைக்கும் கேட்டன நடிகர் திலகம் சிவாஜிக்கு முன்னால்.
1987 அக்டோபரில் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைந்ததும் அ.தி.மு.க பிரிந்திருந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு குழுவும், ஜானகி வீரப்பன் குழுவும் நேர் எதிராக நின்றன.
ஜானகி தலைமையிலான ஆட்சி குறுகிய காலத்திற்குள் கலைக்கப்பட்ட நிலையில்தான் காங்கிரஸிலிருந்து விலகிய சில எம்.எல்.ஏக்களுடன் 1989 ல் ‘‘தமிழக முன்னேற்ற முன்னணி'' கட்சியைத் துவக்கினார்.
ஜானகி அணியிலிருந்த சில தலைவர்கள் கட்சியைத் துவக்குவதற்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அந்த அணியுடன் தேர்தல் கூட்டணி முடிவாகி சிவாஜிக்கு ஒதுக்கப்பட்டது 50 தொகுதிகள்.
பெரும் நம்பிக்கையுடன் அப்போது இருந்தார் சிவாஜி. தேர்தல் பிரச்சாரத்தின் போது திரளான மக்கள் கூடினார்கள். ஆரவாரித்தார்கள். சூழ்ந்து கொண்டு பாசம் காட்டினார்கள்.
தூத்துக்குடியில் துவங்கி சென்னை வரை சிவாஜியுடன் பிரச்சாரத்தின் உடன் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது அவருடைய அடர்ந்த நம்பிக்கையை உணர முடிந்தது.
மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்தது அவருடைய பிரச்சாரம். சினிமா படப்பிடிப்புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பழக்கப்பட்ட சிவாஜி பிரச்சாரத்திலும் அதையே கடைப்பிடித்தார். மக்கள் கூட்டத்தைக் காக்க வைக்க அவர் விரும்பவில்லை. சில இடங்களில் போதுமான கூட்டம் வராவிட்டாலும்,மேடை ஏறுவதில் தாமதம் காட்டவில்லை.
சினிமாவில பேசுவது மாதிரி அடுக்கு மொழி வசனங்களைப் பேசாமல் இயல்பாக சற்று ‘‘சென்டிமென்ட்'' கலந்த மொழியில் இருந்தது அவருடைய பேச்சு. ‘‘அத்தனை வருசம் காங்கிரசுக் காக உழைச்சேன். பெருந்தலைவர் எப்படி நடத்தினார்? என்னை அப்படி மதிச்சார். நானும் உழைச்சேன். ஆனா.. இப்போ என்ன நடக்குது?ஆளுக்காள் நாட்டாமையா இருக்கு.. என்னைத் திட்டம் போட்டு ஒதுக்கிறாங்க.. இது நல்லாவா இருக்கு.. சொல்லுங்க.. நீங்கதான் மக்களே சொல்லணும்.. என்னை ஆதரிப்பீங்களா?'' என்று பிரத்யேகக் குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசும்போது எதிரே இருந்த மக்கள் நெகிழ்வான படத்தைப் பார்க்கிற மாதிரியான பரவசத்துடன் ‘‘ஆதரிப்போம்'' என்று கத்தினார்கள்.
மதுரை, திருவண்ணாமலை என்று எல்லாக்கூட்டங்களிலும் அவருடன் பயணித்தபோது அவருடைய பேச்சு கூடவே பயணித்த எங்களுக்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டது. ஜானகி அணியை ஆதரித்தாலும், எதிர்த்து நின்ற திமு.க.வையும் கடுமை காட்டவில்லை. ஜெயலலிதாவையும் எதிர்க்கவில்லை. ஆனால் எல்லாக்கூட்டங்களிலும் எதிரே இருந்த மக்களிடம் கேள்வி கேட்டபோது பெருவாரியாக ‘‘ஆதரிக்கிறோம் தலைவா'' என்கிற குரல்கள் பரவலாகக் கேட்டன.
சிவாஜி வேட்பாளராகப் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் மிகுந்த சொந்த உணர்வுடன் பிரச்சாரம் செய்தார் ‘‘நம்ம ஜனங்க. இருக்கிற ஊர்லே உங்களை நம்பித்தாம்ப்பா நிக்குறேன்.. பார்த்துக்குங்க... என்னை ஏத்துக்குருவீங்களாப்பா?'' என்று கை தூக்கியபோது ஒரே கைதட்டல்.
இடையிடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும் பேச்சுத்தமிழில் காங்கிரசைத் திட்டி எம்.ஜி.ஆரையும், ஜானகியையும் ஆதரித்த விதம் பரபரப்பானதாக இல்லை. அரசியல்ரீதியாகத் தன்னை ஒரு அரசியல் மாற்றாகக் கருதும் அளவுக்கு அவருடைய பேச்சு மையம் கொள்ளவில்லை. பத்திரிகைகள் தினமும் எதிர்பார்க்கும் பரபரப்பை அவரால் நிரப்ப முடியவில்லை.
பிரச்சாரம் முடிந்து சென்னைக்குத் திரும்பிய பிறகு வீட்டில் சந்தித்தபோதும் எப்படியும் முப்பது தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார். உடனிருந்த அவருடைய கட்சியினரும் அதையே மறுப்பின்றி ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தேர்தல் முடிவு அதிரவைக்கும் விதத்தில் இருந்தது.திருவையாறு தொகுதியில் அவரை எதிர்த்து நின்ற தி.மு.க.வேட்பாளர் துரை. சந்திர சேகரனைவிடப் பத்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றதை அவரால் செரித்துக் கொள்ள முடியவில்லை. போட்டியிட்ட ஐம்பது தொகுதிகளிலும் கிடைத்த தோல்வி அவரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியிருந்தது.
சிலர் தன்னைத் தவறாக வழிநடத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எதிர்பார்த்த இடத்திலிருந்து பொருளாதார உதவியும் கிடைக்காத நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை உதடு பிதுங்க அவருடைய முகம் பிரதிபலிக்கச் சொன்னார். குறிப்பிட்ட தொகையை இழந்ததைக் குறிப்பிட்ட அவர் மிக எளிமையாகக் கேட்ட கேள்வி.
‘‘என்னுடைய நடிப்பை அவ்வளவு ரசிச் சாங்க இந்த ஜனங்க. ஆனா.. பிரச்சாரத்தில் நான் நடிக்கலையேப்பா.. என் மனசில் பட்டதைப் பேசினேன். ஏன் ஜனங்க என்னை ஏத்துக்கலைன்னு தெரியலையே..''
அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு இரா.செழியன் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் ஜனதா தளத்தின் தமிழகத் தலைவராகக் குறுகிய காலம் சிவாஜி இருந்தாலும் கூட அவரால் பெரிய அளவில் அதற்குப் பங்களிப்பைச் செலுத்தமுடியவில்லை என்பதே யதார்த்தம்.
திரை மொழியைப் புரிந்து கொண்ட நடிகர்கள் கூட எளிய மக்கள் மனதில் இருக்கிற அரசியலைப் புரிந்து கொள்ளாமல் பின்தங்கிப் போகிறபோது அவர்கள் உணர்கிற வலுவான அம்சம்& ‘‘பிரபலத்தன்மை மட்டுமே அரசியலில் ஒருவரை அங்கீகரிக்க வைத்து உயர்த்திவிடாது. அதே மாதிரி எந்த வெற்றிடத்தையும் யாரை வைத்து நிரப்புவது என்பதையும் மக்களே தீர்மானிக்கிறார்கள்.''
பெட்டிச் செய்தி:
‘’என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள்”
‘’நடிப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைத்தேன்.ஆனால் சம்பந்தம் உண்டு என்று மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற்றார். He did it. I missed it. எனக்கு அரசியல் இரண்டாம் பட்சம்தான். அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய்விடுவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு.. ’’செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு” என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை என்பதைப் பின்னாளில்தான் புரிந்து கொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சில பேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லை என்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்”
-1997 தினமணி தீபாவளி மலரில் வெளிவந்த சிவாஜி கணேசனின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி. பேட்டி கண்டவர்: சுகதேவ்.
ஏப்ரல், 2018.